Monday, 10 February 2020

படிப்பு முடித்தவுடன் பணியில் சேர்ந்த மாணவர்கள்

எமது துறையில் 2017-2019 கல்வியாண்டில் முதுகலை ஊடகக் கலைகள் பயின்று (17PMA batch) தற்போது ஊடகங்களில் பணியில் சேர்ந்துள்ள மாணவர்களின் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகிறோம்.

Dileepan (17PMA22)
Subhasree (17PMA09)



Wednesday, 5 February 2020

விகடன் மாணவர் பத்திரிகையாளர்

2019-2020 விகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் எமது மாணவர் ப.பாலமுருகன் (18PMA) தேர்வானார். வாழ்த்துகள்!



Thursday, 18 July 2019

ஊடக சாளரம் 3: மெர்சி மற்றும் வருண்

ஜுலை 18 அன்று கலைஞர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மெர்சி மற்றும் இசையமைப்பாளர் வருண் ஆகியோர் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களைச் சந்தித்து தங்களுடைய ஊடக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். 


சத்தியம் மற்றும் கலைஞர் செய்தி அலைவரிசைகளில் ஏழு வருட அனுபவம் பெற்ற மெர்சி சித்ரா, செய்தி சேகரிக்கும் முறை, தணிக்கை செய்வது, தொகுத்து வழங்குவது, நிறுவன அமைப்பு பற்றி விரிவாக விளக்கினார். ஒரு செய்தி வாசிப்பாளர் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள், கையாள வேண்டிய முறைகள், நடைமுறை சிக்கல்கள் ஆகியவற்றை விளக்கினார். செய்தி வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களை படிக்க வைத்து செய்முறை பயிற்சியளித்தது பயனுள்ள நேரமாக அமைந்தது.


இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பணியாற்றி அனுபவம் பெற்ற வருண், திரைப்படத் துறையில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை அம்சங்களை விளக்கினார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் கதை சொல்வதற்கான முன் தயாரிப்பு, தயாரிப்பு, மற்றும் பின் தயாரிப்பு உத்திகள் விளக்கப்பட்டது. திரைப்பட வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், துறை சார்ந்து நிகழ்காலத்தில் சந்திக்கக்கூடிய சவால்கள், பிரச்சினைகள் முதலியவற்றை மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

திரைப்படங்களில் 3D, Dolby Atmos, Cube, DTS போன்ற ஒலி சார்ந்த முறைகள், அவை கலவை செய்யப்படும் ஸ்டுடியோக்கள் பற்றி விளக்கப்பட்டது. இசையமைப்பாளர், Studio Sound Engineer, Recording Engineer, Mixing & Mastering போன்ற ஒலி சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கப்பட்டது.


Friday, 24 August 2018

பட்டம் பெற்ற மாணவர்கள்

எமது துறையில் 2015-17 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 18-08-2018 (சனிக்கிழமை) அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

15PMA வகுப்பில் பயின்ற 15 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 100%. அனைவருமே பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தங்கள் கடந்த கால கல்லூரி அனுபவங்களையும், தற்போது பணியாற்றிவரும் துறை பற்றியும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் பகிர்ந்துகொண்டனர்.



லொயோ கல்லூரியின் பெர்ட்ரம் பெருமண்டபத்தில் துறைத்தலைவர் முனைவர் லூ.சின்னப்பன் மாணவர்களின் பெயர்களை வாசிக்க கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை F. ஆண்ட்ரு சே.ச. அவர்கள் பட்டங்களை வழங்கினார்.

இந்த வகுப்பில் பயின்ற அருட்தந்தை சகாய ஜெரால்டு எபின் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான பதக்கம் பெற்றார்.

இம்மாணவர்களின் பணியும் வாழ்க்கையும் சிறக்க துறை வாழ்த்துகிறது.

Thursday, 31 May 2018

மாணவரின் அடுத்த கட்டம்!

ஊடகக் கலைகள் துறை மாணவர், செ.மாணிக்கவாசகம், நக்கீரன் இதழின் இளம் பத்திரிகையாளர் என்கிற பயிற்சியினைப் பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை வாழ்த்துகிறோம்! தமிழகம் முழுவதிலும் இருந்து 23 பேர் இப்பயிற்சிக்காக தேர்வாகியுள்ளனர். நக்கீரன் பத்திரிகையின் 2018 மே-ஜுன் இதழில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஏற்கனவே எமது துறையில் பயின்ற மாணவர்கள் சிலர் விகடன் மாணவ பத்திரிகையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Friday, 9 February 2018

முன்னாள் மாணவருடன் உரையாடல்

எமது முன்னாள் மாணவர் விஷ்ணு கீதம் (2012-2014 [12PMA]) அவர்களுடன் தற்போதைய முதலாம் ஆண்டு மாணவர்கள் (17PMA) உரையாடினர்.

பெங்களூரு தேசிய நாடகப் பள்ளியில் நடிப்பு பயிற்சி பெற்று வரும் விஷ்ணு கீதம், தனது கற்றலை தன்னுடன் நிறுத்திக்கொள்ளாமல் எதிர்கால ஊடகக் கலைஞர்களுக்கு பகிர்ந்தளித்தார். நடிப்பிற்கு பயன்படும் உடல், குரல், மனம், ஆழ்மனம் உள்ளிட்ட அடிப்படைகளை சரியான முறையில் பயன்படுத்த கற்றுக்கொடுக்கப்பட்டது.

'படச்சுருள்' பத்திரிகையில் வெளியான கட்டுரைகள்  சார்ந்து ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் "Method of Physical Action," உள்ளிட்ட கருத்துகள் விளக்கப்பட்டன.

கேரளாவின் கூடியாட்டம், களறிப்பயட்டு, மஹாராஷ்டிராவின் மல்லகம்பா, கன்னடத்தின் யக்ஷகானா, தமிழகத்தின் தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களுக்கு அறிமுகம் தரப்பட்டது.

நடிப்புக் கலையில் பயிற்சி தரும் கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரங்களையும் மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

வாழ்க்கை அனுபவங்களுடன் கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டதால் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டும் உரையாடலாக இந்நிகழ்வு அமைந்தது. 

Monday, 25 September 2017

சினிமா வியாபாரம் - விரிவுரை

திரைப்படத் துறை வல்லுநர், சினிமா விமர்சகர் திரு.கேபிள் சங்கர் 25-செப்-2017 அன்று ஊடகக் கலைகள் துறை மாணவர்களுக்கு சினிமா வியாபாரம் குறித்து விரிவுரையாற்றினார்.


திரு. கேபிள் சங்கருக்கு பேரா. லாரன்ஸ் ஜெயக்குமார் நினைவு பரிசினை வழங்கினார். அருகில் பேரா.J.K.ஆனந்த்


Outright, Minimum Guarantee (MG), Hire, Distribution, Overflow, Date எடுத்தல், centre fix செய்தல், Collection, Share, Commission, hold-over, in-film advertising, audio rights, theatrical rights, dubbing rights, remake rights, satellite rights, dubbing satellite rights, indian digital rights, foreign digital rights, FMS (foreign, Malaysia, Singapore),   உள்ளிட்ட உத்திகளைப் பற்றி மாணவர்களுக்கு உதாரணங்களுடன் விளக்கினார்.

Monday, 24 July 2017

மாணவருக்கு வாழ்த்துகள்

ஒவ்வொரு ஆண்டும் விகடன் நிறுவனம் தேர்ந்தெடுக்கும் மாணவர் பத்திரிகையாளர் பட்டியலில் எமது மாணாக்கரும் இடம்பெறுகின்றனர்.


இந்த ஆண்டு எம்மிடம் இரண்டாம் ஆண்டு பயின்றுவரும் நூருல் இஸ்லாம் (துறை எண் 16PMA28) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். வாழ்த்துகிறோம்

Wednesday, 15 March 2017

குறும்படப் போட்டி விருது விழா

லொயோலா கல்லூரியில் குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா
- இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கேற்பு


ஐந்தாவது ஆண்டு குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா லொயோலா கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. சென்னை லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் துறை மற்றும் பரிவு மாத இதழ் இணைந்து நடத்திய மாநில அளவிலான குறும்படப் போட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். உடன் நடிகர் ஜான் விஜய் மற்றும் 'தாடி' பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர்.



விழாவின் போது கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில்  திரைத்துறையில் இயக்குநர் ஆக விரும்பும் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்கள், தங்கள் ஊக்கத்தைக் கைவிடாமல் வெற்றி பெறுவதற்காகத் தொடர்ந்து போராட வேண்டும் என்று கூறினார். 



- அறிக்கை: யோவான் தீபக் (15-PMA-02)

Thursday, 16 February 2017

5வது ஆண்டு குறும்படப் போட்டி



முதுகலை ஊடகக் கலைகள் துறை மற்றும் பரிவு மாத இதழ் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான குறும்படப் போட்டி 2017 அறிவிக்கப்பட்டுள்ளது.

5வது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டியில் முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாவது பரிசாக ரூ.5000/-, மூன்றாம் பரிசாக ரூ.3000/- வழங்கப்படவுள்ளது.

குறும்பட விருது விழா லொயோலா கல்லூரியில் மார்ச் 15ஆம் தேதி அன்று நடைபெறும்.


போட்டி விதிமுறைகள்:
குறும்படங்கள் 2016/17 ஆண்டு எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
20 நிமிடங்களுக்குள்ளாக இருக்க வேண்டும்
சந்தேகங்கள் இருப்பின், MediaArts@LoyolaCollege.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.
போட்டியாளர் தகவல் படிவத்தை இணைய வழியாகவே பூர்த்தி செய்யலாம்
போட்டியாளர் தகவல் படிவம்
போட்டி நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.
ஒரு மாணவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் படைத்து அனுப்பலாம்.
குறும்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்08-மார்ச்-2017 (Wed) நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
போட்டியாளர்களின் படைப்புகளை போட்டி நடத்துபவர்களின் விளம்பரங்களில் 
பயன்படுத்திக்கொள்ள
 உரிமை எடுத்துக்கொள்ளப்படும்.


Friday, 23 September 2016

ஊடகங்களே சமூக மாற்றத்திற்கு வித்து - event report

“ஊடகங்கள் சமூகத்தின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும்” - விளக்கினார் லொயோலா கல்லூரியின் சமூக பணி துறை பேராசிரியர் எட்வர்ட் சுதாகர்.


லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் முன்னேற்றத்திற்கும்  தேவையான அறிவுரைகளை வழங்கும் பொருட்டு வாரம் ஒரு ஊடகவியலாளரை அழைத்து அவரது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகின்றது.  அந்த வரிசையில், ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் நேற்று (20.09.2016) நடைபெற்ற நிகழ்வில் பேரா.எட்வர்ட் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
 
அவர் கூறியதாவது: 
சமுதாய மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாதது ஊடகம். சமூகத்தில் நிகழும் சமுதாய சீர்கேடுகளை தெரிவிக்கும் மிக முக்கிய பொறுப்பு ஊடகவியலாளர்களிடம் இருக்க வேண்டும். அது திரைப்படம், அச்சு, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். ஊடகத்தில் நீங்கள் படைக்கும் படைப்பு அனைத்தும் மக்களுக்காக மட்டுமே. அப்படி மக்களுக்காக படைக்கும் படைப்புகள் மக்களின் மனமாற்றத்திற்கு வித்திடும் வகையில் அமைந்தால் நம் சமூகம் விரைவில் நல்வழிபடும்.

சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை எடுத்துக் காட்டி அவற்றில் இருந்து மக்களை விடுபட செய்வதில் ஊடகவியலாளர் பெரும் பங்கு வகிக்கின்றனர். தற்கால இளைஞர்கள் அதிநவீன செயல்திறன் கொண்ட அலைபேசிகள் மூலம் உள்ளங்கையில் உலகை அடைத்து வைத்துள்ளனர்.  சமூக வலைதளம் போன்றவை  சமூக மாற்றத்திற்கு மிகவும் ஏதுவாக உள்ளது. இவ்வாறு ஊடகத் துறையைப் பற்றிய தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.


மேலும் ஊடகப் பார்வையை தவிர்த்து சமூக அக்கரை கொண்டு சில கருத்துகளைப் பகிர்ந்தார்.  அவையாவன:

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் படும் துயரங்கள் வெளியில் தெரிய வேண்டும். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால் தான் அவன் அடுத்த நிலைக்குப் போக முடியும். 
உலகில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்திற்கும் ஒரு பின்னணி உள்ளது.  அதன் பின் மிகப்பெரிய வியாபாரம் மக்களை வைத்து நடைபெறுகிறது. அதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் அதன் பின்புலம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.  தினசரி நாளேடுகளை படிக்க வேண்டும்.
 
இதுபோன்ற பல சமூக நடப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் கொடுத்தார்.

 
இறுதியாக, அவருடைய வருகைக்கும் சொற்பொழிவிற்கும் நன்றி கூறி இரண்டாம் ஆண்டு மாணவர் வா.கிரிதரன் நினைவு பரிசினை வழங்கினார்.

ஒளிப்படம்: ராஜ் பிரஷாந்த் (15PMA08) - PrasanthVisCom@Gmail.com
அறிக்கை:  தணிகைவேல் (15PMA03) - VeluVelu795@Gmail.com

Monday, 4 July 2016

தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல்

2016-17 கல்வியாண்டில் முதுகலை ஊடகக் கலைகள் பட்டப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலுக்கான இணைப்பு: Masters in Media Arts selection list

இப்பட்டப்படிப்பில் சேர்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டிருப்பதால், சேர விருப்பமுள்ளவர்கள் பேரா.லாரன்ஸ் ஜெயக்குமார் அவர்களை +919884264877 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, 27 April 2016

சேர்க்கை 2016

முதுகலை ஊடகக் கலைகள் துறையில் (Masters in Media Arts) 2016-17 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து லொயோலா கல்லூரி இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவிலேயே முதன் முதலில் ஒரு மாநில மொழியில் (தமிழில்) ஆரம்பிக்கப்பட்ட ஊடகத்திற்கான முதல் முதுகலைப் பட்டப்படிப்பு இதுவே!

2006-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படிப்பு, இவ்வருடம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்துடன் 2016-17 கல்வியாண்டை தொடங்கவிருக்கிறது.



துறையைப் பற்றிய 7-நிமிட காட்சித் தொகுப்பு

இப்படிப்பில் பயின்ற மாணவர்கள் சினிமா, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, விளம்பரம், புகைப்படம் போன்ற அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்து வருகிறார்கள் என்பது இத்துறையின் பெருமை.

ஊடகத்துறையில் சாதிக்க நினைப்பவர்களை கண்டறிந்து அவர்களை நெறிப்படுத்தி சாதனையாளர்களாக்கும் முயற்சியில் ஊடகக் கலைகள் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊடகத்துறையில் சாதிக்க விரும்புகிறவர்கள், இக்கல்விக்குரிய தகுதியின் அடிப்படையில் ஊடகக் கலைகள் துறையில் இணையலாம்.

குறிப்பு:  லொயோலா கல்லூரி இணையதளம் வழி மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.

கல்லூரி = இந்தியாவின் முதன்மையான லொயோலா கல்லூரி
படிப்பு = முதுகலை ஊடகக்கலைகள் (M.A.Media Arts)
காலம் = இரண்டு ஆண்டுகள்
கல்வித்தகுதி = ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம்
தொடர்பு எண் : 9884264877

இவண்,
சா.லாரன்ஸ் ஜெயக்குமார்
துறைத்தலைவர்,
ஊடகக் கலைகள்,
லொயோலா கல்லூரி

Wednesday, 24 February 2016

பத்தாம் ஆண்டு நிறைவு விழா - அறிக்கை

19-பிப்ரவரி-2016 அன்று முதுகலை ஊடகக் கலைகள் (M.A. Media Arts) படிப்பு தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெறுவது விழாவாகக் கொண்டாடப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், ஊடகத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முதுகலை ஊடகக் கலைகள் பயின்ற முன்னாள் மாணவர்கள், இத்துறை மாநில அளவில் நடத்திய போட்டிகளில் கலந்துகொண்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.


பயிலரங்கம்:
காலை 10 மணிக்கு துறை பேராசிரியர்கள் குத்துவிளக்கேற்றி பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊடகத் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் தங்கள் ஊடகத் துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

 


திரைப்படத் துறை:
மாணவர் ஜெயசந்திர ஹாஷ்மி தயாரித்த குறும்படம், 'மௌன மொழி' திரையிடப்பட்டபோது அரங்கிலிருந்த அனைவரது கண்களும் நீர்த்தது. இலங்கையில் தவிக்கும் தமிழ் மக்களைப் பற்றியது அந்த குறும்படம்.

பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை எழுதிவரும் மோகன்ராஜன், பின்ணனி பாடகர்கள் ஜெகதீஷ், பிரவீன், மற்றும் திரைப்படத் துறையில் பணிபுரியும் பல முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயிலரங்கில் பங்கேற்க வந்திருந்த மாணவர்கள் கூறினர்.




தொலைக்காட்சி துறை:
விஜய் தொலைக்காட்சி 'கலக்கப்போவது யார்-5' நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜெகன், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக பணிபுரியும் சித்ரவேல், மன்னர் மன்னன், செய்தி நிருபர்கள் ஸ்டாலின், அருண், பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரியும் சுதர்ஷன் மற்றும் பலர் தங்களுடைய தொலைக்காட்சித் துறை அனுபவங்களைப் பகிர்ந்தனர்.



பிற ஊடகத் துறைகள்:
உணவு இடைவேளைக்குப் பின்னும் தொடர்ந்து மேனாள் மாணவர்களின் அனுபவப் பகிர்வு தொடர்ந்தது. திரைப்படம், தொலைக்காட்சி மட்டுமல்லாமல், வானொலி, அச்சு, கல்வி, freelance photography, event management, என்று பல்வேறு தளங்களில் பணிபுரியும் எமது மாணவர்கள் முன் வைத்த பகிர்வுகள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.



உணவு இடைவேளைக்குப் பிறகு அயர்வு ஏற்பட்டுவிடாமல் இருக்க, இடையிடையே கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழா:
மாலை நான்கு மணிக்கு தொடங்கிய பரிசளிப்பு விழாவில், 'ஏப்ரல் மாதத்தில்' இயக்குநர் S.S.ஸ்டான்லி, பரிவு மாத இதழ் ஆசிரியர் சக்திவேல், RJ ராஜேஷ், மற்றும் 'ஆகம்' திரைப்படக் குழுவினர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஜப்பானிய இயக்குநர்கள் வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளாமலேயே சர்வதேச திரைப்படங்களை இயக்குகின்றனர். தமிழ்நாட்டிலும் தமிழில் கற்றுக்கொள்வதற்கு நமது மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்று இயக்குநர் S.S.ஸ்டான்லி கூறினார்.



வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள் இந்தியாவிலேயே தங்கி தொழில் செய்தால் இந்தியா அப்துல் கலாம் சொன்ன வல்லரசாக மாறும் என்பது ஆகம் படத்தின் ஒரு வரிக் கதை என்று கதை எழுத்தாளர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கூறினார்.



இறுதியாக, ஊடகக் கலைகள் துறை நடத்திய பத்து போட்டிகளுக்கான முதல் மூன்று வெற்றி பரிசுகளும், இரண்டு ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.


முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், வருங்கால மாணவர்கள் என்று முச்சங்கமமாகத் திகழ்ந்த 10-வது ஆண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல், நடனத்துடன் இனிதே நிறைவுற்றது.

- அறிக்கை: சாம்சன்

Wednesday, 17 February 2016

பத்தாம் ஆண்டு நிறைவு விழா - அழைப்பிதழ்

எமது துறையின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 19-பிப்ரவரி-2016 மாலை நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்படுகிறது.

விழா அழைப்பிதழ்:
விழா அழைப்பிதழ்

முன்னதாக, போட்டிகளில் தேர்ந்தெடுக்ப்பட்ட (short listed) மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதில், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, கணினி ஆகிய ஊடகங்களில் ஏற்கனவே சாதித்துக் கொண்டிருக்கும் வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இடையிடையே பாடல், நடனம், குறும்படம் திரையிடல் ஆகியவையும் இடம்பெறும்.

மாலை நடைபெறும் நிறைவு விழாவின்போது, இதுவரை எமது துறையில் பயின்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்படும்.

Thursday, 17 December 2015

மாநில அளவிலான ஊடகப் போட்டிகள் - 2016

போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க படைப்புகள் வந்து சேர்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 9 September 2015

வாரம் ஒரு ஊடக வல்லுநர் - சமீபத்திய விருந்தினர்கள்

ஊடகக் கலைகள் துறை 'வாரம் ஒரு ஊடக வல்லுநர்' என்ற தலைப்பில் ஊடகத் துறை சார்ந்த கலைஞர்களின் அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறது.

ஆகஸ்ட் 28: அன்று திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எமது முன்னாள் மாணவர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கலந்துகொண்டார்.  குறும்பட ஆக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த பகிர்வரங்கத்தில் சிறப்புரையாற்றிய ஹாஷ்மி, திரைப்படத்தில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் அதிகம் இருக்கிறது என்றும் அதற்கான உத்திகள் சிலவற்றையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இடமிருந்து வலம்: ஜெயச்சந்திர ஹாஷ்மி, தமிழ் ஸ்டுடியோ அருண், கவின் கவி. வாழ்த்துரை வழங்கும் துறைத்தலைவர்.


ஆகஸ்ட் 31: அன்று இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் தமிழ் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் ஊடகக் கலைகள் துறை மாணவர்களைச் சந்தித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.



செப்டம்பர் 9, 2015 அன்று முன்னாள் மாணவரும் தற்போது தளிர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் ஜெகநாதன் மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார். தற்போது விஜய் அலைவரிசைக்காக தயாரித்துவரும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி வரை மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.

Saturday, 22 August 2015

நிகழ்களம் - 2015

ஆகஸ்ட் 21, 2015 (வெள்ளி), சென்னை: 

பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஊடகப் போட்டிகளை ஊடகக் கலைகள் துறை ஏற்பாடு செய்திருந்தது. 'நிகழ்களம் 2015' என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகள்: பார்த்து பேசு, Selfie!, மற்றும் Ad-Zap. வெவ்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.


ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் காலை 10 மணிக்கு 'பார்த்து பேசு' போட்டி தொடங்கியது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.விக்னேஷ் கார்த்திக் விருந்தினராகப் பங்கேற்று போட்டியிட்ட மாணவர்களுக்கு உற்சாகமளித்தார். துறைத்தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் அவருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.


போட்டிகள் நிறைவு பெற்றதும், 'இன்று நேற்று நாளை' திரைப்படக் குழுவினருடன் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படத்தின் இயக்குநர் R.ரவிக்குமார், படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால், மற்றும் கலை இயக்குநர் விஜய் ஆதிநாதன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு வந்திருந்த மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைப் படக்குழுவினரிடம் கேட்டு தெளிவு பெற்றனர். காலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். திரைப்படக் குழுவின் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த முன்னாள் மாணவர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவர்களுக்கு நன்றி.


போட்டி நடைபெற்ற வளாகத்தில்  ஊடகக் கலைகள் துறை மாணவர்கள் எடுத்த ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


'நிகழ்களம் 2015' ஏற்பாடு செய்வதற்கு குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டிருந்தாலும் போட்டிகளை நல்ல முறையில் நடத்திய ஊடகக் கலைகள் துறை மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.

மேலும் படங்களுக்கு: சொடுக்கவும்.

Wednesday, 19 August 2015

World Movie This Week

ஆகஸ்ட் 19, மாலை 4:30 மணிக்கு ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் 'Life is Beautiful' (1997) திரைப்படம் திரையிடப்பட்டது.

Monday, 20 July 2015

‘காக்கா முட்டை’ படக்குழுவினருக்கு லொயோலா கல்லூரி பாராட்டு!

For photos, click here.

சென்னை, ஜூலை 10:
சென்னை லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் துறையின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா, தேசிய விருது பெற்றகாக்கா முட்டைபடக்குழுவினருக்கு விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு பகிர்வரங்கம் ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் கல்லூரியில் உள்ள ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்காக்கா முட்டைஇயக்குநர் மணிகண்டன், கதையின் நாயகி நடிகை ஐஷ்வர்யா, பெரிய, சிறிய காக்கா முட்டைகள் ரமேஷ், விக்னேஷ் மற்றும் பாட்டி சாந்திமணி ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். தயாரிப்பாளர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் அவர்களின் சார்பாக இயக்குநர் மணிகண்டன் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

பாராட்டுச் சான்றிதழ் வழங்கியவர்
பெற்றுக் கொண்டவர்
அருட்தந்தை ஜோசஃப் ஆண்டனிசாமி,
முதல்வர், லொயோலா கல்லூரி
இயக்குநர் மணிகண்டன்
பேரா. G. ராமமூர்த்தி,
இணை முதல்வர், லொயோலா கல்லூரி
தயாரிப்பாளர்கள் சார்பாக இயக்குநர் மணிகண்டன்
பேரா. ஹென்றி மரிய விக்டர்
முதல்வர், ஊடக ஆய்வியல் புலம்
பாட்டிசாந்திமணி
பேரா. சுரேஷ் பால்,
துறைத் தலைவர், காட்சித் தகவலியல் துறை
பெரிய காக்கா முட்டை
ரமேஷ்
பேரா. லாரன்ஸ் ஜெயக்குமார்,
துறைத் தலைவர், ஊடகக் கலைகள் துறை
சின்ன காக்கா முட்டை
விக்னேஷ்
பேரா.ஞானபாரதி,
ஊடகக் கலைகள் துறை
நடிகை ஐஷ்வர்யா

துறையின் பத்தாவது ஆண்டு விழா என்பதால் பத்து விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன.
கல்லூரி முதல்வரின் பிறந்த நாளும் ஜூலை பத்து என்பதால் அவருக்கும் இன்ப அதிர்ச்சியாக வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

முதுகலை ஊடகக் கலையில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் இப்படிப்பிற்காக விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்று வரவேற்புரையின் போது துறைத்தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

துறையின் பத்து ஆண்டு கால பதிவுகளின் சுருக்கத்தை பேரா.சாம்சன் வாசித்தார்.

'காக்கா முட்டை' படக்குழுவினரை கௌரவிப்பதற்கான அவசியத்தை பேரா.முனைவர் ஞானபாரதி விளக்கினார்.

வாழ்த்துரை:
அருட்தந்தை ஜோசஃப் ஆண்டனிசாமி, முதல்வர், லொயோலா கல்லூரி வாழத்திப் பேசுகையில், “இது போன்ற சிறந்த சமூக சீர்திருத்த படைப்புகளை தரும் படைப்பாளிகளை வாழ்த்துகிறேன். நான் கீழே உட்கார்ந்திருக்கும்பொழுது, சிறிய காக்கா முட்டையுடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘நான் பள்ளிக்கூட பரீட்சையில் கூட ஐம்பது மார்க்கு தாண்டினதில்ல. விகடன் எங்களுக்கு அறுபது மார்க் கொடுத்திருக்காங்க!’ என்றது எனக்கும் வியப்பாகவே இருந்தது!” என்றார்.

பகிர்வு:
இயக்குநர் மணிகண்டன் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு:
ஊடகக் கல்வி பயில ஆர்வம் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் டிப்ளோமா மட்டுமே படிக்க முடிந்தது. 2002ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து திரைப்படத் துறையில் நுழைய முயற்சிகள் எடுத்தேன். என்னுடைய கதைகளில் சூழலே வில்லனாக இருந்ததாலும், தனி கதாநாயகிகள் இல்லை என்பதாலும், கதை நன்றாக இருந்தாலும், அது வெகுஜனத்திற்கு எடுபடாது என்றுச் சொல்லி, கதையை மாற்றியமைக்க கேட்டுக்கொண்டனர். காதல் காட்சிகள் வேண்டும் என்று கேட்டனர். என்னுடைய கதைக்கு அது ஒவ்வாது என்று பதில் அளித்துவிட்டேன். மூன்றாவதாகச் சந்தித்த தயாரிப்பாளர்தான் வெற்றிமாறன். கதையில் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், சமரசம் செய்யமாட்டேன் என்று கூறிய பின்னரே கதையை அவரிடம் விளக்கினேன். தயாரிப்பாளர்கள் இருவரும் திரைப்படத்தின் மீது கொண்ட காதல் காரணமாக விளைந்ததே இந்தப் படம். ஒரு திரைப்பட விழாவிலாவது இந்தப் படம் காட்சிப்படுத்தப்படுமென்றால் அது போதுமானது என்ற நிலையில் எடுக்கப்பட்டப் படம் இப்பொழுது ஒன்பது திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ‘நதிக்குள் விழுந்த கோடரிகதையைப் போன்றதே என் கதையும். மூன்றாவது முறை எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாமே சேர்த்துக் கிடைத்துவிட்டது. படத்திற்கான பட்ஜெட் நீங்கள் நினைப்பதைவிட அதிகமாகவே இருந்தது.

என்னுடைய அடுத்தப் படத்திற்கான பணி நடந்துகொண்டிருக்கிறது. எத்தனைப் படங்கள் இயக்கினாலும் நான் சார்ந்திருக்கும் மதிப்பீடுகளில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்பது எனது எண்ணம். ஊழல் நிறைந்த இந்தச் சமுதாயத்தில் எந்த ஊழலுக்கும் உட்படாது திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது ஆவல்.

காக்கா முட்டை சிறுவர்கள் இருவரும் படத்தில் பேசிய வசனங்களைப் பேசி பார்வையாளர்களின் கரகோஷங்களை அள்ளினர்.
இறுதியாக, பேரா.ஆரோக்கியராஜ் நன்றியுரை வழங்க, தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சி நிரல்

இறை வணக்கம்

வரவேற்புரை
பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார்,
துறைத்தலைவர், ஊடகக் கலைகள் துறை
பத்து விளக்கேற்றல்

துறையின் பத்தாண்டு பதிவுகள்
பேரா. சாம்சன் துரை,
ஊடகக் கலைகள் துறை
நிகழ்ச்சி அறிமுகம்
முனைவர் மா.ஞானபாரதி
ஊடகக் கலைகள் துறை
வாழ்த்துரை
முனைவர் அருட்தந்தை G. ஜோசஃப் ஆண்டனிசாமி சே..,
முதல்வர், லொயோலா கல்லூரி

பேரா. G. ராமமூர்த்தி,
இணை முதல்வர், லொயோலா கல்லூரி
விருதுகள் வழங்கல்

சிறப்பு பகிர்வரங்கம்
மணிகண்டன், இயக்குநர், காக்கா முட்டை
கலந்துரையாடல்
குழுவினருடன் கேள்வி-பதில் நேரம்
நன்றியுரை
பேரா.ஆரோக்கியராஜ்
நாட்டுப்பண்


LC-MAD-KMFA
Loyola College – Media Arts Department – Kaakkaa Muttai Film Appreciation Event