Friday 23 September 2016

ஊடகங்களே சமூக மாற்றத்திற்கு வித்து - event report

“ஊடகங்கள் சமூகத்தின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும்” - விளக்கினார் லொயோலா கல்லூரியின் சமூக பணி துறை பேராசிரியர் எட்வர்ட் சுதாகர்.


லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் முன்னேற்றத்திற்கும்  தேவையான அறிவுரைகளை வழங்கும் பொருட்டு வாரம் ஒரு ஊடகவியலாளரை அழைத்து அவரது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகின்றது.  அந்த வரிசையில், ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் நேற்று (20.09.2016) நடைபெற்ற நிகழ்வில் பேரா.எட்வர்ட் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
 
அவர் கூறியதாவது: 
சமுதாய மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாதது ஊடகம். சமூகத்தில் நிகழும் சமுதாய சீர்கேடுகளை தெரிவிக்கும் மிக முக்கிய பொறுப்பு ஊடகவியலாளர்களிடம் இருக்க வேண்டும். அது திரைப்படம், அச்சு, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். ஊடகத்தில் நீங்கள் படைக்கும் படைப்பு அனைத்தும் மக்களுக்காக மட்டுமே. அப்படி மக்களுக்காக படைக்கும் படைப்புகள் மக்களின் மனமாற்றத்திற்கு வித்திடும் வகையில் அமைந்தால் நம் சமூகம் விரைவில் நல்வழிபடும்.

சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை எடுத்துக் காட்டி அவற்றில் இருந்து மக்களை விடுபட செய்வதில் ஊடகவியலாளர் பெரும் பங்கு வகிக்கின்றனர். தற்கால இளைஞர்கள் அதிநவீன செயல்திறன் கொண்ட அலைபேசிகள் மூலம் உள்ளங்கையில் உலகை அடைத்து வைத்துள்ளனர்.  சமூக வலைதளம் போன்றவை  சமூக மாற்றத்திற்கு மிகவும் ஏதுவாக உள்ளது. இவ்வாறு ஊடகத் துறையைப் பற்றிய தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.


மேலும் ஊடகப் பார்வையை தவிர்த்து சமூக அக்கரை கொண்டு சில கருத்துகளைப் பகிர்ந்தார்.  அவையாவன:

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் படும் துயரங்கள் வெளியில் தெரிய வேண்டும். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால் தான் அவன் அடுத்த நிலைக்குப் போக முடியும். 
உலகில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்திற்கும் ஒரு பின்னணி உள்ளது.  அதன் பின் மிகப்பெரிய வியாபாரம் மக்களை வைத்து நடைபெறுகிறது. அதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் அதன் பின்புலம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.  தினசரி நாளேடுகளை படிக்க வேண்டும்.
 
இதுபோன்ற பல சமூக நடப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் கொடுத்தார்.

 
இறுதியாக, அவருடைய வருகைக்கும் சொற்பொழிவிற்கும் நன்றி கூறி இரண்டாம் ஆண்டு மாணவர் வா.கிரிதரன் நினைவு பரிசினை வழங்கினார்.

ஒளிப்படம்: ராஜ் பிரஷாந்த் (15PMA08) - PrasanthVisCom@Gmail.com
அறிக்கை:  தணிகைவேல் (15PMA03) - VeluVelu795@Gmail.com

Monday 4 July 2016

தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல்

2016-17 கல்வியாண்டில் முதுகலை ஊடகக் கலைகள் பட்டப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலுக்கான இணைப்பு: Masters in Media Arts selection list

இப்பட்டப்படிப்பில் சேர்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டிருப்பதால், சேர விருப்பமுள்ளவர்கள் பேரா.லாரன்ஸ் ஜெயக்குமார் அவர்களை +919884264877 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday 27 April 2016

சேர்க்கை 2016

முதுகலை ஊடகக் கலைகள் துறையில் (Masters in Media Arts) 2016-17 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து லொயோலா கல்லூரி இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவிலேயே முதன் முதலில் ஒரு மாநில மொழியில் (தமிழில்) ஆரம்பிக்கப்பட்ட ஊடகத்திற்கான முதல் முதுகலைப் பட்டப்படிப்பு இதுவே!

2006-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படிப்பு, இவ்வருடம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்துடன் 2016-17 கல்வியாண்டை தொடங்கவிருக்கிறது.



துறையைப் பற்றிய 7-நிமிட காட்சித் தொகுப்பு

இப்படிப்பில் பயின்ற மாணவர்கள் சினிமா, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, விளம்பரம், புகைப்படம் போன்ற அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்து வருகிறார்கள் என்பது இத்துறையின் பெருமை.

ஊடகத்துறையில் சாதிக்க நினைப்பவர்களை கண்டறிந்து அவர்களை நெறிப்படுத்தி சாதனையாளர்களாக்கும் முயற்சியில் ஊடகக் கலைகள் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊடகத்துறையில் சாதிக்க விரும்புகிறவர்கள், இக்கல்விக்குரிய தகுதியின் அடிப்படையில் ஊடகக் கலைகள் துறையில் இணையலாம்.

குறிப்பு:  லொயோலா கல்லூரி இணையதளம் வழி மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.

கல்லூரி = இந்தியாவின் முதன்மையான லொயோலா கல்லூரி
படிப்பு = முதுகலை ஊடகக்கலைகள் (M.A.Media Arts)
காலம் = இரண்டு ஆண்டுகள்
கல்வித்தகுதி = ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம்
தொடர்பு எண் : 9884264877

இவண்,
சா.லாரன்ஸ் ஜெயக்குமார்
துறைத்தலைவர்,
ஊடகக் கலைகள்,
லொயோலா கல்லூரி

Wednesday 24 February 2016

பத்தாம் ஆண்டு நிறைவு விழா - அறிக்கை

19-பிப்ரவரி-2016 அன்று முதுகலை ஊடகக் கலைகள் (M.A. Media Arts) படிப்பு தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெறுவது விழாவாகக் கொண்டாடப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், ஊடகத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முதுகலை ஊடகக் கலைகள் பயின்ற முன்னாள் மாணவர்கள், இத்துறை மாநில அளவில் நடத்திய போட்டிகளில் கலந்துகொண்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.


பயிலரங்கம்:
காலை 10 மணிக்கு துறை பேராசிரியர்கள் குத்துவிளக்கேற்றி பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊடகத் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் தங்கள் ஊடகத் துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

 


திரைப்படத் துறை:
மாணவர் ஜெயசந்திர ஹாஷ்மி தயாரித்த குறும்படம், 'மௌன மொழி' திரையிடப்பட்டபோது அரங்கிலிருந்த அனைவரது கண்களும் நீர்த்தது. இலங்கையில் தவிக்கும் தமிழ் மக்களைப் பற்றியது அந்த குறும்படம்.

பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை எழுதிவரும் மோகன்ராஜன், பின்ணனி பாடகர்கள் ஜெகதீஷ், பிரவீன், மற்றும் திரைப்படத் துறையில் பணிபுரியும் பல முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயிலரங்கில் பங்கேற்க வந்திருந்த மாணவர்கள் கூறினர்.




தொலைக்காட்சி துறை:
விஜய் தொலைக்காட்சி 'கலக்கப்போவது யார்-5' நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜெகன், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக பணிபுரியும் சித்ரவேல், மன்னர் மன்னன், செய்தி நிருபர்கள் ஸ்டாலின், அருண், பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரியும் சுதர்ஷன் மற்றும் பலர் தங்களுடைய தொலைக்காட்சித் துறை அனுபவங்களைப் பகிர்ந்தனர்.



பிற ஊடகத் துறைகள்:
உணவு இடைவேளைக்குப் பின்னும் தொடர்ந்து மேனாள் மாணவர்களின் அனுபவப் பகிர்வு தொடர்ந்தது. திரைப்படம், தொலைக்காட்சி மட்டுமல்லாமல், வானொலி, அச்சு, கல்வி, freelance photography, event management, என்று பல்வேறு தளங்களில் பணிபுரியும் எமது மாணவர்கள் முன் வைத்த பகிர்வுகள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.



உணவு இடைவேளைக்குப் பிறகு அயர்வு ஏற்பட்டுவிடாமல் இருக்க, இடையிடையே கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழா:
மாலை நான்கு மணிக்கு தொடங்கிய பரிசளிப்பு விழாவில், 'ஏப்ரல் மாதத்தில்' இயக்குநர் S.S.ஸ்டான்லி, பரிவு மாத இதழ் ஆசிரியர் சக்திவேல், RJ ராஜேஷ், மற்றும் 'ஆகம்' திரைப்படக் குழுவினர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஜப்பானிய இயக்குநர்கள் வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளாமலேயே சர்வதேச திரைப்படங்களை இயக்குகின்றனர். தமிழ்நாட்டிலும் தமிழில் கற்றுக்கொள்வதற்கு நமது மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்று இயக்குநர் S.S.ஸ்டான்லி கூறினார்.



வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள் இந்தியாவிலேயே தங்கி தொழில் செய்தால் இந்தியா அப்துல் கலாம் சொன்ன வல்லரசாக மாறும் என்பது ஆகம் படத்தின் ஒரு வரிக் கதை என்று கதை எழுத்தாளர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கூறினார்.



இறுதியாக, ஊடகக் கலைகள் துறை நடத்திய பத்து போட்டிகளுக்கான முதல் மூன்று வெற்றி பரிசுகளும், இரண்டு ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.


முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், வருங்கால மாணவர்கள் என்று முச்சங்கமமாகத் திகழ்ந்த 10-வது ஆண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல், நடனத்துடன் இனிதே நிறைவுற்றது.

- அறிக்கை: சாம்சன்

Wednesday 17 February 2016

பத்தாம் ஆண்டு நிறைவு விழா - அழைப்பிதழ்

எமது துறையின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 19-பிப்ரவரி-2016 மாலை நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்படுகிறது.

விழா அழைப்பிதழ்:
விழா அழைப்பிதழ்

முன்னதாக, போட்டிகளில் தேர்ந்தெடுக்ப்பட்ட (short listed) மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதில், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, கணினி ஆகிய ஊடகங்களில் ஏற்கனவே சாதித்துக் கொண்டிருக்கும் வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இடையிடையே பாடல், நடனம், குறும்படம் திரையிடல் ஆகியவையும் இடம்பெறும்.

மாலை நடைபெறும் நிறைவு விழாவின்போது, இதுவரை எமது துறையில் பயின்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்படும்.