Wednesday, 27 April 2016

சேர்க்கை 2016

முதுகலை ஊடகக் கலைகள் துறையில் (Masters in Media Arts) 2016-17 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து லொயோலா கல்லூரி இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவிலேயே முதன் முதலில் ஒரு மாநில மொழியில் (தமிழில்) ஆரம்பிக்கப்பட்ட ஊடகத்திற்கான முதல் முதுகலைப் பட்டப்படிப்பு இதுவே!

2006-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்படிப்பு, இவ்வருடம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்துடன் 2016-17 கல்வியாண்டை தொடங்கவிருக்கிறது.



துறையைப் பற்றிய 7-நிமிட காட்சித் தொகுப்பு

இப்படிப்பில் பயின்ற மாணவர்கள் சினிமா, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, விளம்பரம், புகைப்படம் போன்ற அனைத்துத் துறைகளிலும் மிளிர்ந்து வருகிறார்கள் என்பது இத்துறையின் பெருமை.

ஊடகத்துறையில் சாதிக்க நினைப்பவர்களை கண்டறிந்து அவர்களை நெறிப்படுத்தி சாதனையாளர்களாக்கும் முயற்சியில் ஊடகக் கலைகள் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊடகத்துறையில் சாதிக்க விரும்புகிறவர்கள், இக்கல்விக்குரிய தகுதியின் அடிப்படையில் ஊடகக் கலைகள் துறையில் இணையலாம்.

குறிப்பு:  லொயோலா கல்லூரி இணையதளம் வழி மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கிடையாது.

கல்லூரி = இந்தியாவின் முதன்மையான லொயோலா கல்லூரி
படிப்பு = முதுகலை ஊடகக்கலைகள் (M.A.Media Arts)
காலம் = இரண்டு ஆண்டுகள்
கல்வித்தகுதி = ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம்
தொடர்பு எண் : 9884264877

இவண்,
சா.லாரன்ஸ் ஜெயக்குமார்
துறைத்தலைவர்,
ஊடகக் கலைகள்,
லொயோலா கல்லூரி

Wednesday, 24 February 2016

பத்தாம் ஆண்டு நிறைவு விழா - அறிக்கை

19-பிப்ரவரி-2016 அன்று முதுகலை ஊடகக் கலைகள் (M.A. Media Arts) படிப்பு தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெறுவது விழாவாகக் கொண்டாடப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், ஊடகத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முதுகலை ஊடகக் கலைகள் பயின்ற முன்னாள் மாணவர்கள், இத்துறை மாநில அளவில் நடத்திய போட்டிகளில் கலந்துகொண்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.


பயிலரங்கம்:
காலை 10 மணிக்கு துறை பேராசிரியர்கள் குத்துவிளக்கேற்றி பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊடகத் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் தங்கள் ஊடகத் துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

 


திரைப்படத் துறை:
மாணவர் ஜெயசந்திர ஹாஷ்மி தயாரித்த குறும்படம், 'மௌன மொழி' திரையிடப்பட்டபோது அரங்கிலிருந்த அனைவரது கண்களும் நீர்த்தது. இலங்கையில் தவிக்கும் தமிழ் மக்களைப் பற்றியது அந்த குறும்படம்.

பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை எழுதிவரும் மோகன்ராஜன், பின்ணனி பாடகர்கள் ஜெகதீஷ், பிரவீன், மற்றும் திரைப்படத் துறையில் பணிபுரியும் பல முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயிலரங்கில் பங்கேற்க வந்திருந்த மாணவர்கள் கூறினர்.




தொலைக்காட்சி துறை:
விஜய் தொலைக்காட்சி 'கலக்கப்போவது யார்-5' நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜெகன், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக பணிபுரியும் சித்ரவேல், மன்னர் மன்னன், செய்தி நிருபர்கள் ஸ்டாலின், அருண், பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரியும் சுதர்ஷன் மற்றும் பலர் தங்களுடைய தொலைக்காட்சித் துறை அனுபவங்களைப் பகிர்ந்தனர்.



பிற ஊடகத் துறைகள்:
உணவு இடைவேளைக்குப் பின்னும் தொடர்ந்து மேனாள் மாணவர்களின் அனுபவப் பகிர்வு தொடர்ந்தது. திரைப்படம், தொலைக்காட்சி மட்டுமல்லாமல், வானொலி, அச்சு, கல்வி, freelance photography, event management, என்று பல்வேறு தளங்களில் பணிபுரியும் எமது மாணவர்கள் முன் வைத்த பகிர்வுகள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.



உணவு இடைவேளைக்குப் பிறகு அயர்வு ஏற்பட்டுவிடாமல் இருக்க, இடையிடையே கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழா:
மாலை நான்கு மணிக்கு தொடங்கிய பரிசளிப்பு விழாவில், 'ஏப்ரல் மாதத்தில்' இயக்குநர் S.S.ஸ்டான்லி, பரிவு மாத இதழ் ஆசிரியர் சக்திவேல், RJ ராஜேஷ், மற்றும் 'ஆகம்' திரைப்படக் குழுவினர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஜப்பானிய இயக்குநர்கள் வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளாமலேயே சர்வதேச திரைப்படங்களை இயக்குகின்றனர். தமிழ்நாட்டிலும் தமிழில் கற்றுக்கொள்வதற்கு நமது மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்று இயக்குநர் S.S.ஸ்டான்லி கூறினார்.



வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள் இந்தியாவிலேயே தங்கி தொழில் செய்தால் இந்தியா அப்துல் கலாம் சொன்ன வல்லரசாக மாறும் என்பது ஆகம் படத்தின் ஒரு வரிக் கதை என்று கதை எழுத்தாளர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கூறினார்.



இறுதியாக, ஊடகக் கலைகள் துறை நடத்திய பத்து போட்டிகளுக்கான முதல் மூன்று வெற்றி பரிசுகளும், இரண்டு ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.


முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், வருங்கால மாணவர்கள் என்று முச்சங்கமமாகத் திகழ்ந்த 10-வது ஆண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல், நடனத்துடன் இனிதே நிறைவுற்றது.

- அறிக்கை: சாம்சன்

Wednesday, 17 February 2016

பத்தாம் ஆண்டு நிறைவு விழா - அழைப்பிதழ்

எமது துறையின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 19-பிப்ரவரி-2016 மாலை நடைபெறும் விழாவில் பரிசளிக்கப்படுகிறது.

விழா அழைப்பிதழ்:
விழா அழைப்பிதழ்

முன்னதாக, போட்டிகளில் தேர்ந்தெடுக்ப்பட்ட (short listed) மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதில், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, கணினி ஆகிய ஊடகங்களில் ஏற்கனவே சாதித்துக் கொண்டிருக்கும் வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இடையிடையே பாடல், நடனம், குறும்படம் திரையிடல் ஆகியவையும் இடம்பெறும்.

மாலை நடைபெறும் நிறைவு விழாவின்போது, இதுவரை எமது துறையில் பயின்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்படும்.

Thursday, 17 December 2015

மாநில அளவிலான ஊடகப் போட்டிகள் - 2016

போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க படைப்புகள் வந்து சேர்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 9 September 2015

வாரம் ஒரு ஊடக வல்லுநர் - சமீபத்திய விருந்தினர்கள்

ஊடகக் கலைகள் துறை 'வாரம் ஒரு ஊடக வல்லுநர்' என்ற தலைப்பில் ஊடகத் துறை சார்ந்த கலைஞர்களின் அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறது.

ஆகஸ்ட் 28: அன்று திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எமது முன்னாள் மாணவர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கலந்துகொண்டார்.  குறும்பட ஆக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த பகிர்வரங்கத்தில் சிறப்புரையாற்றிய ஹாஷ்மி, திரைப்படத்தில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் அதிகம் இருக்கிறது என்றும் அதற்கான உத்திகள் சிலவற்றையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இடமிருந்து வலம்: ஜெயச்சந்திர ஹாஷ்மி, தமிழ் ஸ்டுடியோ அருண், கவின் கவி. வாழ்த்துரை வழங்கும் துறைத்தலைவர்.


ஆகஸ்ட் 31: அன்று இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் தமிழ் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் ஊடகக் கலைகள் துறை மாணவர்களைச் சந்தித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.



செப்டம்பர் 9, 2015 அன்று முன்னாள் மாணவரும் தற்போது தளிர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் ஜெகநாதன் மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார். தற்போது விஜய் அலைவரிசைக்காக தயாரித்துவரும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி வரை மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.

Saturday, 22 August 2015

நிகழ்களம் - 2015

ஆகஸ்ட் 21, 2015 (வெள்ளி), சென்னை: 

பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஊடகப் போட்டிகளை ஊடகக் கலைகள் துறை ஏற்பாடு செய்திருந்தது. 'நிகழ்களம் 2015' என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகள்: பார்த்து பேசு, Selfie!, மற்றும் Ad-Zap. வெவ்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.


ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் காலை 10 மணிக்கு 'பார்த்து பேசு' போட்டி தொடங்கியது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.விக்னேஷ் கார்த்திக் விருந்தினராகப் பங்கேற்று போட்டியிட்ட மாணவர்களுக்கு உற்சாகமளித்தார். துறைத்தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் அவருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.


போட்டிகள் நிறைவு பெற்றதும், 'இன்று நேற்று நாளை' திரைப்படக் குழுவினருடன் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படத்தின் இயக்குநர் R.ரவிக்குமார், படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால், மற்றும் கலை இயக்குநர் விஜய் ஆதிநாதன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு வந்திருந்த மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைப் படக்குழுவினரிடம் கேட்டு தெளிவு பெற்றனர். காலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். திரைப்படக் குழுவின் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த முன்னாள் மாணவர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவர்களுக்கு நன்றி.


போட்டி நடைபெற்ற வளாகத்தில்  ஊடகக் கலைகள் துறை மாணவர்கள் எடுத்த ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


'நிகழ்களம் 2015' ஏற்பாடு செய்வதற்கு குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டிருந்தாலும் போட்டிகளை நல்ல முறையில் நடத்திய ஊடகக் கலைகள் துறை மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.

மேலும் படங்களுக்கு: சொடுக்கவும்.

Wednesday, 19 August 2015

World Movie This Week

ஆகஸ்ட் 19, மாலை 4:30 மணிக்கு ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் 'Life is Beautiful' (1997) திரைப்படம் திரையிடப்பட்டது.